யாழ் இந்து

யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று. இது மாணவர்களுக்குக் கல்வி புகட்டும் ஒரு பாடசாலையாக மட்டுமன்றி ஒரு தேசிய எழுச்சியின் ஒரு சின்னமாகவும் விளங்குகிறது. 1887 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி கடந்த சில பத்தாண்டுகளாக பல்கலைக்கழகங்களின் பல துறைகளுக்கும் பெருமளவில் யாழ்ப்பாண மாணவர்களை அனுப்பும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. இதனால், நாட்டில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பல உயர் பதவிகளையும் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் வகித்து வருகிறார்கள். இன்று பெருமளவில் யாழ்ப்பாணத்து மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதால் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களும் பல நாடுகளில் காணப்படுகின்றன.

பின்புலம்

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் உருவான பாடசாலைகள் அனைத்தும் கிறீஸ்தவ மிஷன்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. இப் பாடசாலைகள் மேனாட்டுக் கல்விமுறையை அறிமுகப்படுத்தின. ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டிய இப் பாடசாலைகள் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்களுக்கு அவர்களது பண்பாட்டுப் பின்னணியிலேயே கல்வி புகட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர்களில் முதன்மையானவர் ஆறுமுக நாவலர். இவர் இதற்காகத் சைவத் தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கினார். எனினும் இவை எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மேனாட்டுக் கல்விமுறை, ஆங்கிலக் கல்வி என்பவற்றையும் தக்க வைத்துக்கொண்டே சொந்தப் பண்பாட்டையும் முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற நிலை உணரப்பட்டது. 1888 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, தனது நோக்கங்களில் ஒன்றாக இந்து சமயச் சூழலில் ஆங்கில வழிக் கல்வி புகட்டும் பாடசாலைகளை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தது. எனினும் கிறிஸ்தவ மிஷன்களின் எதிர்ப்புக் காரணமாக இவ்வாறான பாடசாலைகளை அமைப்பது இயலாத ஒன்றாக இருந்தது.

தேசிய நகரப் பாடசாலை

இவ்வாறான பாடசாலை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் நோக்கம் எதிர்பாராத ஒரு முறையில் நிறைவேறியது. 1887 ஆம் ஆண்டில் வில்லியம் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை என்னும் யாழ்ப்பாணத் தமிழ்க் கிறிஸ்தவர் ஒருவர் தேசிய நகர உயர் பாடசாலை (Native Town High School) என்னும் பெயரில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றைக் கிறிஸ்தவ மிஷன் தொடர்புகள் ஏதுமின்றித் தனியாகவே தொடங்கினார். இப் பாடசாலை யாழ்ப்பாணத்தின் கிறிஸ்தவப் பெரும்பான்மைப் பகுதியான பிரதான வீதிப் பகுதியிலேயே அமைக்கப்பட்டது. எனினும் இதனை நடத்துவதில் உள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெயர் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரும், பண வசதி படைத்தவருமான எஸ். நாகலிங்கம் என்பாரின் துணையை சிதம்பரப்பிள்ளை நாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நாகலிங்கம், அதன் காப்பாளராக இருந்து அதன் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை காட்டிவந்தார். 1889 ஆம் ஆண்டில் பாடசாலையை நாகலிங்கம் அவர்களிடம் முழுதாகவே ஒப்படைத்தார் சிதம்பரப்பிள்ளை. பாடசாலையின் புதிய உரிமையாளரான நாகலிங்கம், பாடசாலையை உள்ளூர் இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வண்ணார்பண்ணைப் பகுதிக்கு இடம் மாற்றினார். இதன் பெயரும் நாகலிங்கம் நகர உயர் பாடசாலை (Nagalingam Town High School) எனப் பெயர் மாற்றப்பட்டது.

இந்து உயர் பாடசாலை

நாகலிங்கம் இந்து சமயத்தவர். சைவ பரிபாலன சபையை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இதனால் அவர் தனது பாடசாலையைச் சைவ பரிபாலன சபையின் மேலாண்மையின் கீழ்க் கொண்டுவர விரும்பினார். இதற்கிணங்க 1890 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சபையின் தலைவர் தா. செல்லப்பாபிள்ளை என்பவரின் தலைமையில் கூடிய சபையின் செயற்குழு பாடசாலையைப் பொறுப்பேற்க முடிவெடுத்தது. படசாலையின் பெயரும் அவ்வாண்டிலேயே இந்து உயர் பாடசாலை (Hindu High School) என மாற்றப்பட்டு தற்போதுள்ள இடத்தில் ஒரு தற்காலிக கட்டடத்துக்கு இடம்பெயர்ந்தது. நாகலிங்கம் அவர்களே இதன் முதல் மேலாளராகவும் பொறுப்பேற்றார். 1892 இல் வில்லியம் சிதம்பரப்பிள்ளையின் மகன் என். செல்வத்துரை இதன் தலைமை ஆசிரியரானார்.
பாடசாலைக்கு நிரந்தரமான கட்டிடங்கள் தேவைப்பட்டன. இதற்கான நிலம் வாங்கப்பட்டது. கட்டிடங்களுக்கான நிதி உள்ளூரில் வீடுவீடாகத் திரட்டப்பட்டது. இந்து வணிக நிறுவனங்களும் தாராளமாக உதவின. 100 ஆண்டுகளைத் தாண்டி இன்றும் நிலைத்திருக்கும் இக் கட்டிடம் செப்டம்பர் 28, 1895 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. நவம்பர், 1909 இல் என். செல்வதுரை கண்டி திரித்துவக் கல்லூரிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் சென்றார். ஜி. சிவா ராவ் (Mr G. Shiva Rau) என்பவர் இந்துக் கல்லூரிக்குத் தலைமை ஆசிரியரானார். மே 30, 1910 இல் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதி (Boarding House) திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்திஜி முதல் இன்றிருக்கும் குருஜி ஸ்ரீரவிசர்கர் வரை பல ஆன்மீக பெரியார்கள் யாழ் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார்கள்

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes